< Back
மாநில செய்திகள்
எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது - சேலம் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது - சேலம் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
21 Jan 2024 6:48 PM IST

75 ஆண்டுகளாக திமுக கம்பீரமாக இருக்க கொள்கை உரமே காரணம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம்,

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-

எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்பதை இந்த மாநாடு காட்டுகிறது. 75 ஆண்டுகளாக திமுக கம்பீரமாக இருக்க கொள்கை உரமே காரணம். தமிழினத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்; திராவிடத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

இளைஞர் அணியே என் தாய் வீடு; என்னை வளர்த்தது இளைஞர் அணி. கட்சிக்குள் புது ரத்தத்தை பாய்ச்சியதும் இளைஞர் அணி. நான் சுறுசுறுப்பாக இயங்க முக்கிய காரணம் என்னை சுற்றி இளைஞர்கள் இருந்ததுதான். மாநாட்டில் திரண்ட இளைஞர்களை பார்த்ததும் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது. இளைஞர் அணியினர் பொறுப்புக்கு வர வேண்டும்.

நமக்கு இப்போது வந்துள்ள ஆபத்தை தடுக்கவே திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்று உள்ளது. தமிழகத்திற்கும், வளத்திற்கும், நலத்திற்கும் இப்போது ஆபத்து வந்துள்ளது. மாநிலங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.

மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் எந்திரமாக மாநிலங்களை மாற்றிவிட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. மாநில உரிமைகளை வழங்கும் சிறப்பான இந்திய அமைப்பு சட்டத்தை இந்தியா கூட்டணி தரும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே நமது முழக்கம். தெற்கில் பிறந்த விடியல் வடக்கிலும் பிறக்கும்.

அதிமுக - பாஜக இப்போது நடத்துவது உள்ளே வெளியே விளையாட்டு. எடப்பாடி பழனிசாமியின் பகல்வேசத்தை நம்ப அதிமுகவினரே தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்