ராமநாதபுரம்
கீழக்கரை நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது
|கீழக்கரை நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரை,
கீழக்கரை நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
கீழக்கரை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், மாணவர்களுக்கு சிற்றுண்டி உணவு திட்டம் வழங்கியதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து பேசினார்கள்.
நுழைவுக்கட்டணம்
கீழக்கரையில் உள்ள தர்காவிற்கு கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பறை, குடிநீர் போன்ற எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல் நகருக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது.
கீழக்கரை சீதக்காதி சாலையை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று கவுன்சிலர் ஷேக் ஹூசைன் கூறினார்.
கீழக்கரை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் சட்ட விரோதமாக மது பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதை தடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் முகமது ஹாஜா சுஐபு கூறினார்.
கண்டனம்
கீழக்கரையில் புதிய வார்டு மறுவரையறை சரி செய்யாததால் பொதுமக்கள் வீட்டு வரி செலுத்தும் போது குளறுபடி ஏற்படுகிறது. இதனை நகர் மன்ற கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கவுன்சிலர் முகமது பாதுஷா கருப்பு சட்டை அணிந்து வந்து கண்டனத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் கவுன்சிலர்கள் கூறிய அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து தருவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், கணக்காளர்கள் உதயகுமார், தமிழ்ச்செல்வன், செல்வகுமார், சரவணக்குமார் உள்பட நகராட்சி ஊழியர்கள். மற்றும் கவுன்சிலர்கள் நசீருதீன், மீரான் அலி, பயாஸ்தீன், சித்திக், சப்ராஸ் நவாஸ் உள்பட 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.