'கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை' - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி
|செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடைபெரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் கூட்டணி, நான் போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து செய்தியாளர் ஒருவர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டார். அதற்கு அவர், 'ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து கூறிவிட்டேன்' என தெரிவித்தார்.