நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்..!
|நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
'கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. நேற்று நடந்த மாவட்ட கலெக்டர்கள், துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாக, 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சென்னை ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் (ஐ.டி.காரிடார்) உள்ள பெருங்குடி சுங்கச்சாவடியில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூலிப்பது, இந்த அரசு பதவி ஏற்றவுடன், கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோர், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோர் பெரும் பயனடைந்தனர்.
இந்த சாலையில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் விரைவாக நடந்து வருவதால், சாலையின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று இன்று (வியாழக்கிழமை) முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் இதனால் மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.