மதுரை
மதுரை ரெயில் தீ விபத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை- பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டம்
|மதுரை ரெயில் பெட்டி தீ விபத்தில், 9 பேர் பலியான சம்பவத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டமாக கூறினார்.
மதுரை ரெயில் பெட்டி தீ விபத்தில், 9 பேர் பலியான சம்பவத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டமாக கூறினார்.
விசாரணை
மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ரெயில் பெட்டியில், கியாஸ் அடுப்பில் 'டீ' போடும்போது சிலிண்டர் வெடித்ததால், இந்த விபத்து நடந்து உள்ளது. இந்த விபத்து குறித்து தென்மண்டலங்களுக்கான ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேற்று மதுரை ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரையில் நடந்த ரெயில் பெட்டி தீ விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த முழுமையான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். எங்களது முதல்கட்ட விசாரணையில், பெட்டியில் சிலிண்டர் அடுப்பு மூலம் 'டீ' போடும் போது தான் விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும்.
இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்து உள்ளோம். சுற்றுலா ரெயில் பெட்டிகள், பயணிகளுக்கான ரெயில் பெட்டிகளில் இனி வரும் காலங்களில் இது போல் விபத்து நடக்காமல் இருக்க விதிமுறைகள் வகுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித்திட்டம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில் பெட்டி
முன்னதாக பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி, விபத்தில் உயிர் தப்பிய பயணிகளிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர், தீயில் கருகி இருந்த ரெயில் பெட்டியை பார்வையிட்டார். மேலும் அங்கு தீயில் கருகி இருந்த பொருட்களையும் முழுமையாக ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகி போன ரெயில் பெட்டியை முழுவதுமாக ஆய்வு செய்து வருகின்றனர். தடயவியல் குழுவினரும், பெட்டியில் வேறு ஏதும் சந்தேகப்படியான பொருட்கள் எதுவும் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.