< Back
மாநில செய்திகள்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை - சத்யபிரதா சாகு விளக்கம்
மாநில செய்திகள்

விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை - சத்யபிரதா சாகு விளக்கம்

தினத்தந்தி
|
6 Jun 2024 2:41 PM IST

விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை,

விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனிடையே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டுள்ளார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. வேட்பாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஐகோர்ட்டை நாடுவதே முறை. கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரிலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்