< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு தடை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு தடை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
28 April 2023 5:11 AM IST

தமிழ்நாடு அரசின் விளக்கத்தைக் கேட்காமல் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து, இந்த விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.

ஆன்லைன் சூதாட்டம் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்துதல் சட்டம் என்ற தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்குகளை தொடர்ந்துள்ளன.

திறமையான விளையாட்டு

இந்த வழக்குகள் எல்லாம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஒரு மனுதாரர் தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆன்லைன் ரம்மியை திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்களே கூறியுள்ளன. தமிழ்நாடு அரசின் தடைச் சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தியது தவறு.

எனவே, ஆன்லைன் ரம்மியை இந்த சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது. மதுபானமும் மக்களுக்கு தீ்ங்கு விளைவிக்கக்கூடியதுதான். அதற்காக அரசு மதுபானத்துக்கு தடை விதித்து விட்டதா? என்று வாதிட்டார்.

சூதாட்டம் இல்லை

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஆர்யமா சுந்தரம், "ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை சூதாட்டமாக கருத முடியாது. அவை அதிர்ஷ்ட விளையாட்டுகள் அல்ல. திறமைக்கான விளையாட்டுகள். இந்த விளையாட்டுகளை முறைப்படுத்தலாம். அதற்காக தடை விதிக்க முடியாது.

தற்போது ஐ.பி.எல். போட்டிகளுக்கும் கூட 'ட்ரீம் 11' என்ற ஆன்லைன் விளையாட்டு உள்ளது. எனவே தற்போதைய சூழலில் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

அரசின் கடமை

இதேபோல, ஒரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், பங்குச்சந்தையில் ஏற்படும் இழப்பாலும் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக பங்குச்சந்தை வணிகத்துக்கு தடை விதிக்க முடியுமா? என்று வாதிட்டார். இவர்களது வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வக்கீல் கபில் சிபில் வாதிட்டார். அவர், "ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏனெனில் இது மாநிலம் சார்ந்த பிரச்சினை. மாநில அரசு சட்டம் இயற்றி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்துவிட்டால் அதை வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது. ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அப்பாவி இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. அந்த அப்பாவி குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

என்ன தவறு?

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை அருகே உள்ள எனது சொந்த ஊரான தேனூரில் மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ கூடாது என தடை உள்ளது என்று கருத்து கூறினார். பின்னர் நீதிபதிகள், "ஏற்கனவே தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயம், லாட்டரி சீட்டு போன்றவற்றுக்கு தடை உள்ளதுபோலத்தான், ஆன்லைன் சூதாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மரணங்கள், அந்த குடும்பங்களின் சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு தன் மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

முடியாது

பின்னர் மக்கள் நலன் தான் முக்கியம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் விரிவான விளக்கத்தைக் கேட்காமல், இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு எதுவும் தற்போதைய சூழலில் பிறப்பிக்க முடியாது. இ்ந்த வழக்குகளுக்கு தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும். விசாரணையை வருகிற ஜூலை 3-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்