பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு
|சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதியளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் , 'சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதியளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் கார் பந்தயம் நடத்த தடை விதிக்க முடியாது. எப்ஐஏ எனும் சர்வதேச கூட்டமைப்பு உரிமத்தைப் பெற்று பந்தயத்தை நடத்த வேண்டும். பொதுமக்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.