புதுக்கோட்டை
புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை-பயணிகள் குற்றச்சாட்டு
|புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் புறக்கணிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய ரெயில் பாதை
புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும். திருச்சி-ராமேசுவரம் வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கியமான ரெயில் நிலையமாகும். புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இத்திட்டம் தொடர்பாக முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான இத்திட்டத்திற்கு கடந்த 2012-2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே ரெயில் பாதை கந்தர்வகோட்டை வழியாக 65 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் இத்திட்டத்திற்காக நில அளவை பணிகள் நடைபெற்றன.
கிடப்பில் போடப்பட்டது
கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே வாரியத்திடம் இத்திட்டத்திற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திட்டமதிப்பீடு அப்போது ரூ.619 கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. புதுக்கோட்டை-தஞ்சாவூர் புதிய ரெயில் பாதை திட்டமானது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால் புதுக்கோட்டைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளன. இதனால் இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பயணிகள் தரப்பிலும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நிதி ஒதுக்கப்படவில்லை
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக வேதனை அடைந்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.