< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க உடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை- திருமாவளவன் திட்டவட்டம்
மாநில செய்திகள்

பா.ஜ.க உடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை- திருமாவளவன் திட்டவட்டம்

தினத்தந்தி
|
13 Jun 2023 8:59 AM IST

பா.ஜ.க.- பா.ம.க. உடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை,

மதுரை புதூர் பஸ் நிலைய பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாதிய வன்முறை சம்பவங்களை கண்டித்தும், சாதிய ஆணவப்படுகொலைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை திருமோகூரில் நடந்த சாதிய வன்முறையை கண்டித்து ஒத்தக்கடை பகுதியில் நடத்தினால் பதற்றம் உருவாகும் என்ற நோக்கத்தில் தான் மதுரை மாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனை மற்ற சமூகத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும். திருமோகூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கூறினர். ஆனால், நான் அங்கு சென்றால் தேவையற்ற பதற்றம் உருவாகும். இதனால், உழைக்கும் மக்கள் இரு தரப்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அங்கு செல்லவில்லை.

ஒட்டுமொத்த மக்களும் வன்முறையை விரும்புவதில்லை. எளிய மக்களை ஒடுக்க நினைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகள், பிழைகள் ஒட்டுமொத்த கிராமத்திற்கு எதிராக திரும்பிவிடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள். கிராம புறங்களில் கஞ்சா அதிகமாக புழங்கி வருகிறது. இதனால் தான் வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. திருமோகூரில் நடந்ததும் அதுதான்.

தமிழகம் முழுவதும் இதுபோன்று ஒரு சில போதை இளைஞர்கள், கும்பல்களால் தான் பிரச்சினை நடக்கிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்தால், இரு தரப்பு சமூக மோதலை தடுத்து சமதானம் செய்யலாம். காவல்துறை உயரதிகாரிகள் அப்படி இருந்தாலும், கீழே உள்ள ஒரு சில காவல்துறை அதிகாரிகள் ஒரு சார்பாக இருப்பதால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது.

மதுரை மாவட்டதில் அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கமோ , காவல்துறைக்கு எதிரான போராட்டமோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர், தமிழக அரசுக்கு எதிராக, முதல்- அமைச்சருக்கு எதிராக என கூறுவார்கள். அதனை கண்டுகொள்ள கூடாது. தி.மு.க.விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். தேர்தலை மனதில் வைத்து இதுபோன்று போராட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. படுகொலைகள், தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றை தடுக்க நினைத்து குரல் கொடுக்கின்றோம். நாங்கள் சாதிய கட்சி அல்ல. ஜனநாயக கட்சி. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் எப்போதும் நிற்போம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் கூட அதிக உயரத்திற்கு ஏற்றினால் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கும் பா.ம.க. தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர். கொடி கம்பம் ஏற்ற விடாமல் போராட்டம் நடத்துங்கள் என்று பா.ம.க. தலைவர்கள் கூறுகின்றனர். வன்னிய சமூக மக்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் காதல் தி்ருமணங்களுக்கு நான் தான் காரணம் என்கிறார்கள். நான் பிறப்பதற்கு முன்பாக காதல் திருமணங்கள் நடைபெறவில்லையா?. என் ஒருவனை எதிர்ப்பாதாக தமிழகம் முழுவதும் கூட்டங்களை போட்டவர் ராமதாஸ். தமிழகத்தில் சாதிய அமைப்புகளை அரசியல் கட்சியாக மாற்றியது ராமதாஸ் தான். தர்மபுரி வன்முறைக்கு காரணம் ராமதாஸ் தான்.

அரசியல்சூனியம் ஏற்படுத்தினாலும் பா.ஜ.க.வோடு, பா.ம.க.வோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் 25 இடத்தை பிடிப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். இதில் சூது, சூழ்ச்சியை எடுத்துவருவார்கள். சனாதன சக்திகளை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து விரட்ட வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி இருப்பது போல், இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணிகள் அமைய வேண்டும். சாதி அடிப்படையில் மக்களை பிளவு படுத்தும் யுக்திகளை விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் செய்யாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்