கடலூர்
என்.எல்.சி. 2-வது சுரங்க ராட்சத எந்திரத்தில் திடீர் தீ
|என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் உள்ள ராட்சத எந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நெய்வேலி,
ராட்சத எந்திரத்தில் திடீர் தீ
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 2-வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 2-வது சுரங்கத்தில் வெட்டக்கூடிய மேல்மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ரூ.300 கோடி மதிப்பிலான ராட்சத எந்திரம் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. கன்வேயர் பெல்ட் மூலம் சுரங்கத்தின் மேல் மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் அந்த ராட்சத எந்திரம் ஈடுபட்டிருந்த போது எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் முடியவில்லை.
கரும்புகையாக...
இதற்கிடையே தீ மேலும் பரவி ராட்சத எந்திரம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் சுரங்கம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது.
இதுபற்றி அறிந்த என்.எல்.சி. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த ராட்சத எந்திரம் லேசான சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து என்.எல்.சி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரங்கத்தில் நடந்த இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.