என்.எல்.சி விவகாரம்: அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
|என்.எல்.சி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,
என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
தமிழகத்தின் மின்தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது என்.எல்.சி. அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின் உற்பத்திக்கு நில எடுப்பு அவசியம். அதிக மின் உற்பத்தி தேவை என்பதால் நில எடுப்பு என்பது அவசியமாகிறது. பல்வேறு கால கட்டங்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. நில உரிமைதாரர்களுக்கு இழப்பீடு, நிரந்தர வேலை உள்ளிட்டவை குறித்து பேசப்படுகிறது.
என்எல்சி நிறுவனத்தில் தற்போது 1711 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது. இதை உறுதிசெய்ய உயர்மட்ட குழுவை முதல்-அமைச்சர் அமைத்துள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
ரூ.100 கோடி சிஎஸ்ஆர் நிதியை கடலூர் மாவட்டத்தில் செலவு செய்ய என்எல்சி நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 60,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. தேவைக்கு அதிகமான நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது. எனவே அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
#JUSTIN || தமிழகத்தின் மின்தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது என்.எல்.சி
— Thanthi TV (@ThanthiTV) March 24, 2023
* அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின் உற்பத்திக்கு நில எடுப்பு அவசியம்
* அனைத்து கட்சிகளும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் - பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு#NLC pic.twitter.com/GFXUruLsDE