என்.எல்.சி. விரிவாக்க பணி தொடக்கம்: நெற்பயிர்களை பொக்லைன் மூலம் அழித்ததால் விவசாயிகள் வேதனை
|என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் வயல்களில் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அழித்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது என்.எல்.சி. நிறுவனம். இங்குள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதில், 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2015-16-ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அப்போது இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.6 லட்சம் நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சுரங்க பணிகள் மேற்கொள்ளாமல் இருந்ததால், அங்கு விவசாயிகள் தங்களது விவசாய பணியை வழக்கம் போல் மேற்கொண்டு வந்தனர்.
கூடுதல் இழப்பீடு
இந்த சூழ்நிலையில், தற்போது 2-வது சுரங்கம் விரிவாக்க பணியை நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதியில் சுரங்கம் அமைக்க தேவையான ஆக்கப்பூர்வ பணியை, கடந்த சில மாதங்களாக நிர்வாகம் அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.
ஆனால், மேற்கூறிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் வழங்கும் இழப்பீடு தொகை போதாது என்றும், புதிய நில எடுப்பு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து என்.எல்.சி.க்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் சுரங்கம்-2 விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் பாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கூடுதல் இழப்பீடு தருவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர்.
போலீஸ் குவிப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வளையமாதேவி பகுதிக்கு ராட்சத பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக குவிக்கப்பட்டனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
தொடர்ந்து காலையில், அங்குள்ள வயல்வெளி பகுதி வழியாக ராட்சத பொக்லைன் எந்திரங்கள் இறக்கப்பட்டன. பின்னர், சுரங்கம் அமைய உள்ள பகுதி வழியாக செல்லும் பரவனாற்றின் திசையை மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கியது.
தற்போது, புதிய வழித்தடமாக, வளையமாதேவியில் இருந்து மேலகொளக்குடி அருகே சென்று திரும்பி செல்லும் விதமாக வாய்க்கால் வெட்டும் பணி நடக்கிறது.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்
இதற்கிடையே, தற்போது பணிகள் நடைபெறும் இடத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஏறக்குறைய 15 நாட்களுக்குள் அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகி இருந்தனர்.
ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் இவ்வளவு வேகமாக பணிகளை தொடங்கி விடுவார்கள் என்று விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், நெல் வயல்களுக்குள் பொக்லைன் எந்திரங்களை இறக்கி, பயிர்களை அழித்து விட்டனர். இதில் சுமார் 1½ ஏக்கர் அளவிலான பயிர்கள் நேற்று அழிக்கப்பட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதை தடுக்க வந்த விவசாயிகள் யாரையும் அருகே போலீசார் விடவில்லை. சில பெண்கள் மண்ணை வாரி இறைத்து கண்ணீர் விட்டு அழுததையும் பார்க்க முடிந்தது.
மறியல் முயற்சி
நெற்பயிர்கள் அழிக்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் தரப்பிடம் விசாரித்தபோது, இழப்பீடு தொகை இவை அனைத்திற்கும் சேர்த்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், இதை சில விவசாயிகள் மறுக்கவும் செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த பா.ம.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து சென்று, 50 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்
15 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணியை கண்டித்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கொள்ளுக்காரன்குட்டை, கொஞ்சிக்குப்பம், கண்ணுத்தோப்பு, ஊ.மங்கலம் ஆகிய இடங்களில் நடந்த இந்த கல்வீச்சு சம்பவங்களில் சென்னை வந்த அரசு பஸ் உள்பட 6 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 5 பஸ்களின் கண்ணாடியையும், விழுப்புரம் மாவட்டத்தில் 4 பஸ்களின் கண்ணாடியையும் மர்மநபர்கள் உடைத்தனர்.
மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளின் நடுவே டயர்களை போட்டு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.