< Back
மாநில செய்திகள்
என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
4 Aug 2023 5:15 AM IST

என்.எல்.சி. கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பயிர் சேதம்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி, தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பயிர்களை சேதப்படுத்திய என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். போராட்டத்துக்கு தடை எதுவும் விதிக்காமல், விசாரணையை தள்ளிவைத்தார்.

கடும் மோசம்

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது சூழ்நிலை மாறியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு என்.எல்.சி., தரப்பில் ஆஜரான வக்கீல் நித்தியானந்தம், 'முன்பைவிட தற்போது சூழ்நிலை கடும் மோசமாக உள்ளது. பெண் ஊழியர்களை வேலைக்கு வரவிடாமல் தடுக்கும் விதமாக அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர். அதுவும் குழந்தைகள், பெண்களை கொண்டு இந்த செயலை செய்கின்றனர்" என்றனர்.

வேலை கிடைக்குமா?

இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதி, "என்.எல்.சி. மூடிவிட்டால், ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்குமா? அங்குள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இதுபோன்ற செயலை அனுமதிக்க முடியாது" என்று கூறினார்.

ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜி.சங்கரன், "இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. என்.எல்.சி. வக்கீல் மிகைப்படுத்தி கூறுகிறார்" என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்.எல்.சி., வக்கீல், போராட்டக்காரர்கள் என்ன செய்தார்கள் என்பதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. இந்த போராட்டக்காரர்களால், வேலை தடைபடுகிறது" என்றார்.

அனுமதி கூடாது

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "என்.எல்.சி., தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்த ஒரு இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேர்வு செய்ய வேண்டும். என்.என்.சி., தலைமை கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது. யாராவது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும்' என்று கூறினார்.பின்னர், என்.எல்.சி, நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் உள்ள பிரச்சினையை பேசி தீர்க்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக ஏன் நியமிக்கக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

போராட்டம் வாபஸ்?

அதற்கு தொழில் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், "விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவையுங்கள். என் கட்சிக்காரக்களிடம் கேட்டு தெரிவிக்கிறேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தால், போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம்" என்று கூறினார். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கருத்தை கேட்டு தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றார். இதற்கு தொழிலாளர்கள் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, சமரச பேச்சுவார்த்தைக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து இரு தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்