கடலூர்
என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 120 விவசாயிகள் கைது
|கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தக்கோரி நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் 120 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலி,
காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்தக்கோரியும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அனல் மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தின் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ராஜேஷ் வரவேற்றார்.
தள்ளுமுள்ளு
சங்கத்தின் செயலாளர் வேலுநாயக்கர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர் அவர்கள் முற்றுகையிடுவதற்காக 2-வது அனல் மின் நிலையத்தின் கேட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தடையை மீறி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட 120 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்களை நெய்வேலி 20-வது வட்டத்தில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் அடைத்து வைத்தனர். அங்கு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.