இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது தேர்தல் திருவிளையாடல் - அமைச்சர் துரைமுருகன்
|கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
அரசியல் கட்சிகள் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கும்; எப்போதோ பேசியதை இப்போது பரப்புவதா?. சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. இன்னும் தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும்தான் தற்போதைக்கு பேசிவிட்டு சென்றுள்ளனர். தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அதற்காக உள்ள குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என இன்னும் இறுதி முடிவாகவில்லை. தற்போதைக்கு வருவார்கள், போவார்கள். அரசியல் என்பது திருவிளையாடல் போன்றதுதான். அதுபோலதான் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது. தேர்தலின்போது கட்சிகள் கூட்டணி மாறுவது என்பது இயல்பான ஒன்றுதான். அரசியலில் எங்களை இன்று எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.