தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
|தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
பட்டமளிப்பு விழா
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மொத்தம் 29 ஆயிரத்து 620 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒருவருக்கு டாக்டர் பட்டத்தையும், 40 பேருக்கு ஆராய்ச்சி பட்டங்களையும் நிர்மலா சீதாராமன், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக வழங்கினார்கள்.
இந்தியா எதிர்கொள்ள தயார்
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
இந்தியா உலகின் மருந்தகமாக திகழ்கிறது. உலக மருத்துவ சுற்றுலாவிலும் இந்தியா 10-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவுக்கு முன்பே சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தாலும், அந்த நாடுகளில் இன்றும் கொரோனா பரவல் இருந்து வருகிறது.
ஆனால் இந்திய தடுப்பூசிகள் தரமானவை என்ற அடையாளத்தை பெற்றன. மத்திய-மாநில அரசுகள் இணைந்து அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தியதால், மாறுபட்ட கொரோனா தாக்குதல்களையும் இந்தியா சமாளித்தது. இப்போது கொரோனாவின் ஒமைக்ரான் தொற்று பல நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
தமிழில் இருக்கவேண்டும்
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
அதற்காக ஆங்கிலத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தாய்மொழியில் பலம் இருந்தால் இன்னும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் ஆராய்ச்சிக்கும், உயர்கல்விக்குமான புரிதல் ஆழமாக இருந்தால், முன்னேறுவதற்கான வாய்ப்பும் மேம்படும். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. இதை தமிழக அமைச்சர் முன்னிலையில் தெரிவிக்கிறேன்.
மருத்துவக் கல்வி மற்றும் உயர்கல்வியில் நம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிப்படையாக அனைவருக்கும் இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.