நிர்மலா தேவி வழக்கு; தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய முடிவு
|தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி(வயது 54), தன்னிடம் படிக்கும் சில மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார் என்று கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ வைரலானது.
இதையடுத்து நிர்மலா தேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். மேலும் நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேர் புகார் தெரிவித்த நிலையில், அவர் கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலா தேவியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். பேராசிரியை நிர்மலாதேவியை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்தினார் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நெறிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நாங்கள் இதை பார்க்கிறோம். இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீட்டில் இந்த வழக்கு நிச்சயமாக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.