நீலகிரி: காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
|காதலி பேசுவதை நிறுத்திவிட்டதால், வாலிபர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைக்குந்தா பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் ஒரு வருடத்திற்கு முன் அந்தப் பகுதியை சேர்ந்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த இளம்பெண் கார்த்திக்கை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். மேலும் கார்த்திக்குடன் பேசுவதை அந்த இளம்பெண் நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் விரக்தி அடைந்து மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் மதுப்பழக்கம் அதிகமானதால் சரிவர பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே வாழ விரும்பாத கார்த்திக் அவ்வப்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டார். கடந்த 24-ம் தேதி இரவு உணவை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்ற கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் புதுமந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.