சென்னை, கோவை, திருப்பூர் உள்பட 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
|கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, கோவை, திருப்பூர் உள்பட 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
கோவை,
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் விசாரணை நடத்தி, கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (23), முகமது தல்கா (25), அப்சர்கான் (28), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த நிலையில் கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முகமது அசாருதீன் உள்பட 6 பேரையும் சென்னை அழைத்து வந்து பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த கோட்டை மேடு, ஜமேஷா முபின் வீட்டிலும் சோதனை செய்தனர். அவர்கள், தொடர்ந்து நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
43 இடங்களில் சோதனை
இதையடுத்து தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட 43 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் சென்னையை பொறுத்தவரை 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மண்ணடி பகுதி இப்ராகிம் தெருவை சேர்ந்த ராஜா முகமது, புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் சாலை 5-வது தெருவை சேர்ந்த ஜலாவுதீன், வியாசர்பாடி புதுநகர் 7-வது தெருவை சேர்ந்த ஜாபர் அலி, எம்.கே.பி. நகரை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்கிற ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்ற பின்னர் சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தினர்.
கோவை
கோவையில் ஜமேஷா முபின் மற்றும் கைதான 6 பேர் வீடுகள் உள்பட 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிகாலையிலேயே கோவை வந்தனர்.
இதில் ஜமேஷா முபின் தனது வீட்டுக்கு பிளாஸ்டிக் டிரம் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த நாசர் என்பவரின் வீடு மற்றும் கோவையில் உக்கடம் வின்சென்ட் ரோடு, புல்லுக்காடு, அன்பு நகர், ஜி.எம்.நகர், குனியமுத்தூர் வசந்தம்நகர், குறிஞ்சி நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட வீடுகளில் ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சல்லடைபோட்டு தேடினர்.
செல்போன்கள் பறிமுதல்
சோதனையின்போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே அனுமதிக்கவில்லை. அத்துடன் வீட்டுக்குள் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. சோதனை நடைபெற்ற 33 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. 10 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் சிலரின் வீடுகளில் இருந்து செல்போன்கள், மின்னணு சாதனங்கள், மடிக்கணினி, பிளாஸ்டிக் டிரம் உள்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
நீலகிரி, திருப்பூர்
இதேபோல நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே ஓட்டுப் பட்டறை என்ற இடத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் உறவினர் வீடு திருப்பூரில் உள்ளது. அவரிடம் விசாரணை நடத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருப்பூர் வந்தனர். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள முகமது யூசுப் வீட்டுக்கு சென்று அவரை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.
சீர்காழி
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் உள்ள அல்பாஷித் என்பவரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சகோதரி மற்றும் தாயாரிடமும் இந்த விசாரணை தொடர்ந்தது.