சட்டவிரோத ஆயுத, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு; இலங்கை நபர் சென்னையில் கைது
|சட்டவிரோத ஆயுத, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த இலங்கையை சேர்ந்த நபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு,
சென்னையை அடுத்த செங்கல்பட்டு கேளம்பாக்கம் தையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது பைசல் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகமது பைசல் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் அந்த நபர் தனது குடும்பத்துடன் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சட்டவிரோத ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இலங்கையை சேர்ந்த ஒரு கும்பல் தொடர்பில் உள்ளதும், அந்த கும்பலுடன் முகமது பைசல் தொடர்பில் இருந்ததும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பைசல் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அவர் குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்ததும் தெரியவந்தது.
டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் குடியேறிய பைசல் கடைசியா கேளம்பாக்கத்தில் உள்ள கழிப்பட்டூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட முகமது பைசலிடமிருந்து டிஜிட்டல் சாதனங்கள், லேப்டாப், செல்போன், சிம்கார்டு, இலங்கை பாஸ்போர்ட்டு, இந்திய ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.