நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வட மாநிலத்தவர் தேர்வு; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் - டி.ஆர்.பாலு எம்.பி. கண்டனம்
|என்.எல்.சி நிறுவனத்தின் நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல் என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழக இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், என்.எல்.சியின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை, முன்னாள் முதல்வரும், எங்கள் தலைவருமான கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதன் மூலம், நாட்டின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக்கும் முயற்சி அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது. என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாகி விடக்கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் அப்போதும், இப்போதும், எப்போதும் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, வடமாநிலங்களைச் சேர்ந்த 299 பேரை தேர்வு செய்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக உள்ளது.
ஏற்கெனவே, தங்கள் சொந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக தாரை வார்த்துவிட்டு, அதில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு எத்தனை பெரிய பேரிடி இது?
என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்.
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில், தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், கருணாநிதியைப் போலவே, எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினும் உறுதியுடன் உள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 05.05.2022 அன்று, என்.எல்.சி நிறுவனத்திற்கான பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் தேர்வில், என்.எல்.சி நிறுவன சுரங்கப்பணிகளுக்கு நிலத்தை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கேட் நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது, அத்தேர்வை எழுதாத தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் செயலாகும் என்பதையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.
அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அடியோடு பிடுங்கி எறியும் செயல்பாட்டில் என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
குறிப்பிட்ட மாநிலத்திற்கு தன்னியல்பாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை, ஒன்றிய அரசின் நிறுவனம் திட்டமிட்டே தட்டிப் பறிப்பது கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
எனவே, தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பட்டதாரிப் பொறியாளர்களுக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பணிவாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணிநியமனத்திற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.