< Back
மாநில செய்திகள்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில செய்திகள்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு

தினத்தந்தி
|
11 Feb 2023 4:17 AM IST

2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியது போல, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி - டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை சென்னை கொரட்டூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969, கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாள். அந்த தேதியில்தான் இன்றைக்கு பரிதி இளம்சுருதிக்கு திருமணம் நடக்கிறது.

எப்போதெல்லாம் தலைவர் கருணாநிதியினுடைய பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதற்காக பாடுபட்ட பேனாதான் அவர் பேனா. டைடல் பார்க்கை வடிவமைத்து அதை உருவாக்குவதற்கு கையெழுத்து போட்ட பேனாதான் கருணாநிதியினுடைய பேனா. பூம்புகாரை உருவாக்கித் தந்ததும், அதற்கும் திட்டமிட்டதும், அதற்கும் கையெழுத்து போட்டதும் கருணாநிதி பேனாதான்.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட பேனாவும் கருணாநிதியினுடைய பேனாதான். லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பேனாவும் கருணாநிதியினுடைய பேனாதான். தமிழ் சமுதாயத்தினுடைய தலையெழுத்தையே மாற்றி அமைத்த பேனாவும், தலைவர் கருணாநிதியினுடைய பேனா தான். அந்த பேனா எழுதிய லட்சியம் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு கையேடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் கூட பார்த்தீர்கள் என்றால், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் யாரும் வரவில்லை.

உங்களுக்கு என்ன காரணம் என்று தெரியும். ஈரோட்டில் தேர்தல். பல பேர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது முக்கியம். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது வந்திருக்கலாம் என்று கேட்கலாம். இன்றைக்கு டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில். ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா?.

சேது சமுத்திர திட்டத்தை பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார். பதில் இல்லை. வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லித்தான் பிரதமராக இருக்கக்கூடிய மோடி ஆட்சிக்கு வந்தார். என்ன ஆயிற்று?

வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை எல்லாம், நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 லட்சத்தை வங்கி கணக்கில் போடுவேன் என்றார். அது, நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?. ரூ.15 லட்சம் வேண்டாம், ரூ.15 ஆயிரம், ரூ.15 ஆவது போட்டிருக்கிறார்களா? இல்லை.

அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய கனிமொழி கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆயிற்று? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடியே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒரு செங்கல்லை வைத்து உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் நாடாளுமன்ற தேர்தல் வருமே, உதயநிதி இன்னொரு செங்கலை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவாரே என்ற பயம் வர வேண்டாமா? இந்த நிலையில்தான், கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒன்றுக்கும் பதில் இல்லை.

அதேபோல ஆ.ராசா கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தயாநிதி மாறன் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்கிறார். நாடாளுமன்றத்தில் 'கோரமே' இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள் என்று.

அதேபோல தமிழச்சி தங்கபாண்டியன், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால் எண்ணற்ற பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகக்கூடிய கொடுமைகள் தினம் தினம் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது என்று கூறி, அதைப்பற்றி கேட்டால் எது எதற்கோ விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல மாநிலங்களவையில் திருச்சி சிவா ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு- எப்படி 2021-ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித்தரக்கூடிய ஒருநிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்