'தொண்டர்களின் கருத்தை அறிந்த பின் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்' - ஓ.பன்னீர்செல்வம்
|மேல்முறையீடு செய்வது குறித்து கழக நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி,
கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அ.தி.மு.க. தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களின் கருத்தை அறிந்த பின் அடுத்தகட்ட முடிவை நாங்கள் அறிவிப்போம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.