மதுரை
களிமண்ணுக்குள் விதைகள் ைவத்து கைதிகள் உருவாக்கிய விநாயகர் சிலைகள்
|களிமண்ணுக்குள் விதைகள் வைத்து கைதிகள் உருவாக்கிய விநாயகர் சிலைகள் மதுரை சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
களிமண்ணுக்குள் விதைகள் வைத்து கைதிகள் உருவாக்கிய விநாயகர் சிலைகள் மதுரை சிறை அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன.
மதுரை சிறை கைதிகள்
மரம் வளர்ப்பது பற்றி எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆயினும் மரம் வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் எத்தனை பேர்?
அப்படியே மரம் வளர்க்க செடிகளை நட்டாலும், மரமாக வளர்க்கும் வரை பராமரிப்பவர்கள் எத்தனை பேர்?
வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் மழை வளம் பெருகும். இதனை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றி இருக்கிறார்கள், மதுரை மத்திய சிறை கைதிகள்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். எனவே களிமண்ணில் விநாயகர் சிலைகள் செய்யும் போதே அதற்குள் விதைப்பந்துகளில் உள்ளது போன்று மரங்களுக்கான விதைகளை வைத்து விநாயகர் சிலையாக உருவாக்கி வருகிறார்கள்.
இந்த சிலைகளை கரைக்கும் போது விதைகள் பல்வேறு இடங்களுக்கு சென்று முளைத்து மரமாகக்கூடும் என்பதால், அவர்கள் உருவாக்கிய சிலைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-
சிறை அங்காடியில் விற்பனை
மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள கைதிகளால் இனிப்பு வகைகள், மரச்சாமான்கள், சிமெண்டு தொட்டிகள், சிலாப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு சிறை வளாகத்திற்கு முன்பு உள்ள அங்காடியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கைதிகள் மூலம் களிமண் விநாயகர் செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து மதுரை மத்திய சிறை டி.ஐ.ஜி. பழனி, சிறை சூப்பிரண்டு வசந்தகண்ணன் ஆகியோரிடம் உதவி சிறை அலுவலர் பழனி தெரிவித்தார்.
500 சிலைகள்
அதை தொடர்ந்து சிமெண்டு தொட்டிகள் செய்யும் கைதிகள் 7 பேர் மூலம் விதை பந்து விநாயகர் சிலைகளை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை களிமண்ணில் செய்யப்படும் விநாயகர் சிலையின் உள்ளே வைத்து உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வரை சுமார் 500 சிலைகள் செய்யப்பட்டன. அதற்கு வர்ணம் தீட்டும் பணி இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து சிறை சூப்பிரண்டு வசந்தகண்ணன் கூறும் போது, மார்க்கெட் விலையை விட சிறை அங்காடியில் இதன் விலை 40 சதவீதம் குறைவாக விற்கப்படும். மதுரை மத்திய சிறையில் முதன் முதலாக இந்த ஆண்டு தான் விநாயகர் சிலை செய்யும் பணி தொடங்கப்பட்டது.
இந்த சிலையை நீர் நிலைகளில் கரைக்கும்போது அதில் இருக்கும் விதை மூலம் மரங்கள் உருவாக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்களுக்கு பயன் உள்ள வகையில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.