"தமிழகத்தில் பரவும் புதிய வகை கொரோனா" - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
|தமிழகத்தில் ஓமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஓமைக்ரான் பிஏ4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "கொரோனோ தொடர்பாக 7 வகை வைரஸ் உருவானது. அதில் பிஏ 4 என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரானில் உள்ள 7 வகைகளில் பிஏ 4 ஒரு வகை.
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது அவருக்கு குணமாகிவிட்டது. அவருடன் தொடர்பிலிருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட பிஏ 4 கொரோனா வகை தமிழகத்திலும் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஓமைக்ரான் பிஏ 4 கொரோனா வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஐதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.