கல்குவாரி விபத்தில் மீட்பு பணி தாமதத்திற்கு என்ன காரணம்... ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம்
|கல்குவாரி விபத்தில் மீட்கும் பணி தாமதத்திற்கான காரணம் குறித்து ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம் கொடுத்துள்ளார்.
நெல்லை,
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள். விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், மீட்புப்பணி தாமதத்திற்கு காரணம் என்ன என்பதை ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்குகிறார். அவர் கூறும்போது, 300 அடி பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது நாங்கள் நினைத்தபடி எளிதாக அமையவில்லை. அடிக்கடி மழை பெய்கிறது. மேலும், பள்ளத்தில் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை. தொடர்ந்து பாறைகளும், சிறு, குறு கற்களும் விழுந்த வன்னம் உள்ளது. தற்போதுதான் கற்கள் விழுவது சிறிது குறைந்துள்ளது. அதிகாரிகள் விரைவாக செயலாற்றி வருகின்றனர். வெளியே செல்வதற்கு பாதை ஒன்று இருந்திருந்தால், இந்த பணிகள் முதல் நாளிலேயே முடிந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.