திருச்சி
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 12 பேர் காயம்
|ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
கல்லக்குடி:
ஜல்லிக்கட்டு
புள்ளம்பாடி ஒன்றியம் கோவாண்டகுறிச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் தூய சந்தியாகப்பர் ஆண்டு பெருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி கோவாண்டகுறிச்சி- வடுகர்பேட்டை சாலையின் மேற்கு பகுதியில் மேடை அமைத்து, மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு, கோவில் மாடுகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெசிலினாசுகந்தி, ஊராட்சி தலைவர் வியாகுலஈஸ்வரி ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அதிகாலை 5 மணி முதல் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 1.30 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த காளைகள் என மொத்தம் 538 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
பரிசுகள்
மேலும் 244 வீரர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகளை பிடித்தனர். விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் திமிறிக்கொண்டு சென்றன. சில காளைகள் வீரர்களை முட்டித்தூக்கி வீசி மிரள செய்தன. இதில் காளைகள் முட்டியதில் 12 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, எல்.இ.டி. டி.வி.கள், மின்விசிறிகள், சில்வர் அண்டாக்கள், செல்போன்கள், சைக்கிள்கள், தங்க மற்றும் வெள்ளி காசுகள் என ரூ.6 லட்சம் மதிப்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக மேலரசூர் பனைமட்டை சுப்பிரமணியன் காளையும், சிறந்த மாடுபிடி வீரராக திருச்சி சாந்தபுரம் ரஞ்சித்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு பேரவையினர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானவர்கள் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.