நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: டாக்டர் காந்தராஜிடம் போலீசார் விசாரணை
|நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் டாக்டர் காந்தராஜிடம் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை,
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை ரோகிணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 13-ந் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், 'டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழில் செய்பவர்கள் போன்று பேசியுள்ளார். இந்த பேட்டி, திரைப்படத்துறையை சேர்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் உள்ளது. அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது பெண்களின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் கடந்த 16-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு காந்தராஜுவுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனை ஏற்று, டாக்டர் காந்தராஜ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் நடிகைகள் குறித்து பேசிய கருத்துக்கு யூடியூப் சேனலில் டாக்டர் காந்தராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று டாக்டர் காந்தராஜ் தெரிவித்திருந்தார்.