திருவாரூர்
திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர்
|மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசை
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது. இந்த நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்குவது வழக்கம்.மேலும் இயலாதவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
அதன்படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் அதிகாலையில் ஏராளமானோர் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி, காய்கறி, வாழைப்பழம் ஆகியவற்றை படையலிட்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மக்கள் கூட்டம் அலைமோதியது
இதன் காரணமக காலை முதல் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தினை சீரமைத்திட போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டை சிவன் கோவில் குளக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள ராமர் பாதத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.