< Back
மாநில செய்திகள்
உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று செம்பனார்கோவிலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவில் கலெக்டர் மகாபாரதி பேசினார்.

திருக்கடையூர்:

உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று செம்பனார்கோவிலில் நடந்த சிறுதானிய உணவு திருவிழாவில் கலெக்டர் மகாபாரதி பேசினார்.

சிறுதானிய உணவு திருவிழா

செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, தனியார் கல்லூரி கல்விக்குழும நிர்வாக இயக்குனர் குடியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாணவிகள், காட்சிப்படுத்தி வைத்திருந்த சிறுதானிய உணவுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கம்பு, திணை, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுவதும், உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் தூங்குவதும் உகந்தது ஆகும். உணவு வகைகளில் சிறுதானியத்தின் பயன்பாட்டை அதிகரித்து கொள்ள வேண்டும்.

'சகி' சேவை மையம்

வளரும் பருவத்தில் திருமண பாரம் வேண்டாம். எனவே குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணை அழைக்கலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். தனிப்பட்ட இடத்திலோ அல்லது பொது இடத்திலோ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை "சகி" என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பெறலாம்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியான உதவிகளையும், மருத்துவ ரீதியான உதவிகளையும், போலீஸ் துறை ரீதியான உதவிகளையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் மேற்கண்ட ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெறலாம். ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பினை உறுதி செய்திட, அனைத்து போலீஸ் நிலையத்திலும் குழந்தை நேய பாதுகாவலர் உங்களுக்காக காத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், சிறுதானிய உணவு திருவிழா போட்டியில் பங்குபெற்ற தனியார் கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கேடயத்தை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்