< Back
மாநில செய்திகள்
கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுக: டிடிவி தினகரன்
மாநில செய்திகள்

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுக: டிடிவி தினகரன்

தினத்தந்தி
|
21 Sep 2023 9:58 AM GMT

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்