< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

தினத்தந்தி
|
10 Sept 2023 7:33 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுமாப்பிள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது31). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி இவருக்கும், சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது மாமியார் வீட்டில் இருந்து உறவினர் கார்த்திக் (27) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கும்மிடிப்பூண்டி நோக்கி ரவி வந்து கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையின் மத்தியில் உள்ள சிமெண்ட் தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புதுமாப்பிள்ளை ரவி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த கார்த்திக் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் விபத்தில் உயிரிழந்த ரவி உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த கார்த்திகை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கவரைபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்