< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
கடலூர்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி

தினத்தந்தி
|
15 Jun 2023 6:45 PM GMT

கடலூரில் திருமணமான 8 நாளில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் வழிசோதனைப்பாளையம் அடுத்த கெங்கநாயக்கன்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விமல்ராஜ் (வயது 25). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த ரவீனா என்பவருக்கும் கடந்த 8 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று அவரது மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக வேலைக்கு சென்று விட்டு சீக்கிரம் வந்துவிடுவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு விமல்ராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர், திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டிதெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி, செல்போன் இணையதள சேவைக்கான கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் கை உரசியதில், அவர் மின்சாரம் தாக்கி மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

முற்றுகையிட முயற்சி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே விமல்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விமல்ராஜ் இறந்தது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் இறந்த விமல்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அதே நிறுவனத்தில் வேலை வழங்கிட வேண்டும். இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அல்லது கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். இல்லையெனில் விமல்ராஜ் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

பரபரப்பு

உடனே அங்கிருந்த போலீசார், முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட விமல்ராஜின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை முயற்சியை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்