தேனி
புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு:கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|புத்தாண்டையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டையொட்டி, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, பெரியகுளம் தென்கரையிலுள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. உற்சவருக்கு மலர்களால் ஆன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே வந்து சாமி தரிசனம் செய்தனர். கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
கம்பம் வேலப்பர் கோவில், கம்பராயப்பெருமாள் கோவில், வேலப்பர் கோவில், ஆதிசக்தி விநாயகர் கோவில், மாலையம்மாள்புரத்தில் உள்ள ராஜகணபதி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அம்மனுக்கு பல்வேறு வகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலை முதலே வந்த பொதுமக்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடி பின்னர் கோவிலில் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், பத்ரகாளிபுரம் பத்ரகாளியம்மன் கோவில், உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டையொட்டி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் காலை 6 மணி முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவில், பிச்சாங்கரை கீழ சொக்கநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
லோயர்கேம்பில் உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அருகில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் நினைவு மணிமண்டபத்தை கண்டு ரசித்தனர். கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர் கோவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்து உள்ள காமாட்சி அம்மன் கோவில், கூத்தபெருமாள் கோவில், கூடலழகிய பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வழிபாடு நடந்தது.