< Back
மாநில செய்திகள்
புத்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடு: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை
மாநில செய்திகள்

புத்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடு: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
31 Dec 2022 7:59 AM IST

அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்பதற்காக போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சென்னை,

வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு நடைபெற உள்ளது. இதில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்பதற்காக போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சென்னையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்பது வழக்கம். எனவே இன்று இரவு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

31-ந்தேதி (இன்று) புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, 'உயிரிழப்பு இல்லா புத்தாண்டுக்கு முன்னாள்' என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் வருமாறு:-

* கடற்கரை உட்புற சாலை 31-ந்தேதி இரவு 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

* காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

* அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

* டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்ைதவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

* அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம்.

* பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

* அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

* எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு பின்னர் 6-வது அவென்யூ நோக்கி 1-ந்தேதி அன்று 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

* 6-வது அவென்யூ, 5-வது அவென்யூ சந்திப்பு, 4-வது மெயின் ரோடு சந்திப்பு, 3-வது மெயின் ரோடு சந்திப்பு, 16-வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7-வது அவென்யூ எம்.ஜி. ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்கு வாகனங்களை நிறுத்தலாம்? மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருவோர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை வரை ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 2. வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 3. பாரதி சாலை (விக்டோரியா ஓட்டல் சாலை-பாரதி சாலை சந்திப்பில் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 4. பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை. 5. டாக்டர் பெசன்ட் சாலை (எம்.ஆர்.டி.எஸ். அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

6. லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 7. ராணி மேரி கல்லூரி வளாகம். எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:-

1. பெசன்ட் நகர் 4-வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 2. பெசன்ட் நகர் 3-வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 3. பெசன்ட் நகர் 4-வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 4. பெசன்ட் நகர் 5-வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 5. பெசன்ட் நகர் 2-வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

6. பெசன்ட் நகர் 3-வது அவென்யூ- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) போக்குவரத்து விதிமீறல்களை நவீன கேமரா கண்காணிக்கும்-போலீசார் எச்சரிக்கை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ஏ.என்.பி.ஆர். கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்