தேனி
புத்தாண்டு கொண்டாட்டம்:வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அணையின் இருகரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பகுதிகளில் பல்வேறு பொழுபோக்கு அம்சங்கள் உள்ளது. பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால் கடந்த சில நாட்களாகவே வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். ஒரு ஆண்டுக்கும் மேலாக இயங்காமல் இருந்த சிறுவர்கள் உல்லாச ரெயில் புத்தாண்டையொட்டி நேற்று இயக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
அதேபோல வைகை அணையின் பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் மதகு முன்பாக நின்றபடி சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்கிடையே அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதால் 2 கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் முழ்கியது. இதனால் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.