"அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டு கொண்டாட்டம்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு
|பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாகன சோதனைகளை தீவிரப்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எந்தவித அசம்பாவிதங்களும், விபத்துகளும் இன்றி சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்காக காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.