< Back
மாநில செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் இடத்தில் ரூ.2 கோடியில் புதிய திருமண மண்டபம்
மதுரை
மாநில செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் இடத்தில் ரூ.2 கோடியில் புதிய திருமண மண்டபம்

தினத்தந்தி
|
27 Jun 2022 9:21 PM GMT

மதுரை செல்லூர் பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பில் மீனாட்சி அம்மன் கோவில் இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்காக கட்டிட பணிகள் நேற்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

மதுரை செல்லூர் பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பில் மீனாட்சி அம்மன் கோவில் இடத்தில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்காக கட்டிட பணிகள் நேற்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

புதிய திருமண மண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மதுரை நகர் மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் உள்ளது. அந்த இடங்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி செல்லூர் அகிம்சாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 1½ ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிர்வாகம் கைப்பற்றியது. பின்னர் அந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டி பாதுகாத்து வந்தது.

இந்த நிலையில் தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு கோவில் நிர்வாகம் சார்பில் பயன்படுத்தாமல் உள்ள அந்த காலி இடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்தது. அது குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை

இந்த நிலையில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நேற்று காலை நடந்தது. அதற்காக அங்கு கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் உத்தரவின் பேரில் கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன், மதுரையை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன் கூறும் போது,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான செல்லூர் பகுதியில் உள்ள இடத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 5,500 சதுரஅடியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்படுகிறது. அதில் திருமண கூடம், உணவு அருந்தும் இடம் என பல்வேறு சுகாதார வசதிகளுடன் புதிய திருமண மண்டபம் ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. முதல்-அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நேற்று கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 1½ ஏக்கர் பரப்பளவில் கொண்ட இந்த இடத்தில் தரைதளத்துடன் திருமண மண்டபம் கட்டப்படுகிறது.

200 பேர் அமரும் வகையில் கட்டப்படும் இந்த மண்டபத்தை 18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் கட்டப்படும் முதல் திருமண மண்டபம் இது தான். வடக்கு திசை பார்த்த வாசலுடன், மணமேடை கிழக்கு பார்த்த வகையில் அமைக்கப்படுகிறது.

ரூ.35 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி

எல்லீஸ்நகர் மெயின் ரோட்டில் உள்ள காலி இடத்திலும் மற்றொரு திருமண மண்டபம் கட்ட முடிவு செய்துள்ளோம். இது தவிர எல்லீஸ்நகரில் பக்தர்கள் தங்கும் விடுதி அருகே புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. அது தரைத்தளத்துடன் 4 தளம் கொண்ட கட்டிடமாக அமையும். மேலும் அங்கு ஏ.சி.வசதி மற்றும் சாதாரண அறைகள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கடந்த 2-ந் தேதி திறக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேலும் வீரவசந்தராயர் மண்டபம் கட்டுவதற்கான கற்களை எடுக்க ஜூலை முதல் வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடன் மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்கி விடும். அதை தொடர்ந்து கற்களை தொடர்ந்து எடுக்கலாம். இதன் மூலம் வீரவசந்தராயர் மண்டபம் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்