சென்னை
சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்தது
|சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் ஒரு மணிநேரத்தில் 45 விமானங்களை இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஏ.சி.டி.எம். எனப்படும் 'விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு' எனும் புதிய மென்பொருள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
இந்திய விமான நிலையங்களின் ஆணையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மென்பொருள் மும்பை விமான நிலையத்தில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. மும்பைக்கு அடுத்த படியாக சென்னையில் இந்த புதிய மென்பொருள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஏ.சி.டி.எம். மென்பொருள் பயன்படுத்துவதன் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான பாதுகாப்பு துறை, விமான நிறுவனங்களின் அதிகாரிகள், கிரவுண்ட் லோடர்கள் எனப்படும் தரைப்பணியாளர்கள், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் முடிவு எடுக்கும் போது விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதுடன் விரைவான விமான சேவையை விரைந்து அளிக்க முடியும்.
இந்த புதிய மென்பொருள் மூலம் பொது தளத்தில் விமான நிறுத்தத்தில் இருந்து விமானம் எப்போது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும், விமானம் ஓடுதளத்துக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை ஒரே நேரத்தில் முடிவு செய்யலாம்.
இதனால் டாக்ஸிவேயில் விமானம் காத்திருக்காமல் நேரடியாக ஓடுபாதைக்கு சென்று ஓடத் தொடங்கும். அதோடு விரைந்து வானில் பறக்க தொடங்கும். அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து விமானம் வானில் பறப்பதற்கான துல்லியமான முடிவை இந்த பொதுத்தளம் உறுதி செய்யும்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவது குறையும். அதோடு எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டு செலவும் குறையும். பயணிகளுக்கு தாமதம் இல்லாமல் சிறந்த சேவைகள் வழங்குதல், விமான நிறுத்தங்களின் மேலாண்மையை சிறப்பாக்குதல் உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
சென்னை விமான நிலையத்தில் தற்போது ஒரு மணி நேரத்துக்கு 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுவதால் இனி ஒரு மணி நேரத்துக்கு 45 விமான சேவைகளாக அதிகரிக்கும். இந்த புதிய மென்பொருள் நேற்று அதிகாலை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.