< Back
மாநில செய்திகள்
நொய்யலை மாசற்றதாக மாற்ற புதிய திட்டம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

நொய்யலை மாசற்றதாக மாற்ற புதிய திட்டம்

தினத்தந்தி
|
6 Oct 2023 1:15 AM IST

நொய்யல் ஆற்றை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி' என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


நொய்யல் ஆற்றை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி' என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாசுபட்ட நொய்யல் ஆறு

காவிரியின் உபநதியான நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 158.35 கி.மீ. தூரத்திற்கு ஓடுகிறது. இதில், கோவை மாவட்டத்தில் 62.21 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் நொய்யல் ஆற்றின் குறுக்கே 17 அணைக்கட்டுகளும், 25 குளங்களும் அமைந்துள்ளன. நொய்யல் ஆறு கோவை மாநகராட்சி, பேரூராட்சிகளின் வழியே அமைந்துள்ளதால், கழிவுநீர் அதிக அளவில் கலந்து மாசடைந்துள்ளது.

கழிவுநீர் ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து அவற்றை தடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள, தேசிய நதி பாதுகாப்பு இயக்குனரக திட்ட இயக்குனர் ஜி.அசோக்குமார் கடந்த 2 நாட்கள் நாட்கள் நொய்யல் ஆற்று ஆரம்பப் பகுதி முதல் இருகூர் அணைக்கட்டு வரை ஆய்வு மேற்கொண்டார்.

புதிய திட்டம்

இதன்தொடர்ச்சியாக, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தேசிய நதி பாதுகாப்பு இயக்குனரகத்தின் திட்ட இயக்குநர் ஜி.அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.சிவலிங்கம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் எம்.சுப்பிரமணியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிறுதுளி அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நொய்யல் ஆற்றினை மாசற்றதாக மாற்ற "நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுவதுடன், நொய்யலை சீர்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்