நீலகிரி
கைவினை கலைஞர்கள் கடன் பெற புதிய திட்டம்
|கைவினை கலைஞர்கள் கடன் பெற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கழகத்தின் மூலம் மரபு வழி கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற பெயரில் மரபு உரிமை கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் மூலம் குறைந்த வட்டியில் தொழிலுக்கான உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை வாங்க உதவும் நோக்கில் கடன் வழங்கப்படுகிறது.விரசாத் திட்டம் 1-ல் கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000-த்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் கடனாக ரூ.10 லட்சம் வரை பெண்களுக்கு 4 சதவீத வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீத வட்டி வீதத்திலும், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். விரசாத் திட்டம் 2-ல் கடன்தொகை பெற திட்டம் 1-ல் பயன்பெற முடியாதவர்கள் மற்றும் கிராமப்புறம், நகர்புறங்களில் வசிப்பர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8,00,000 மிகாமல் இருக்க வேண்டும். கடன் பெற விரும்பும் கைவினைக் கலைஞர்கள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.