வேலூரில் ஜீப்பை அப்புறப்படுத்தாமல் போடப்பட்ட புதிய சாலை...
|சாலையில் நின்று கொண்டிருந்த பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல், அதன் மீது புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில், சாலையின் ஒரு பகுதியில் பழுதடைந்த பழைய ஜீப் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்த ஜீப்பை அப்புறப்படுத்தாமல், அப்படியே அதன் மீது சாலையை போட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், அப்பகுதிக்கு நேரில் சென்று கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தியுள்ளார். இதே போல அந்த தெருவில், வீடு கட்டுவதற்காக சாலையோரம் இரும்புக் கம்பிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் அப்புறப்படுத்தாமல் இரும்புக் கம்பிகள் மீது தார் சாலை அமைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலம் காளியம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல், அதன் மீது சிமெண்ட் சாலை போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.