< Back
மாநில செய்திகள்
மீஞ்சூரில் ரூ.62 கோடியில் புதிய நீர்த்தேக்கம் - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூரில் ரூ.62 கோடியில் புதிய நீர்த்தேக்கம் - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
21 Oct 2022 2:08 PM IST

மீஞ்சூரில் ரூ.62 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 1 கோடியே 6 ஆயிரத்து 392 என்ற அளவில் உயர்ந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்க பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியும் கண்ணன்கோட்டை ஏரியும் இனைத்து 1,496 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடி மதிப்பில் 5 புதிய நீர்த்தேக்கம் கடந்த கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இதேபோல் பொன்னேரி தாலுகாவில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் பொன்னேரி தாலுகாவில் உள்ள பகுதிகளில் நீர் வற்றியதால் அருகே உள்ள வங்க கடல் நீர் உள்ளே புகுந்து உப்பு நீராக மாறியது.

இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மீஞ்சூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தேவையான குடிநீர் விவசாயத்துக்கு தேவையான நீரும் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்ட நிலையில் ஏரிகளில் நீரை தேக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் காட்டூர், தத்தைமஞ்சி ஆகிய 2 ஏரிகளை இணைத்து கொள்ளளவை மேம்படுத்தி புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக நபார்டு வங்கியின் மூலம் ரூ.55.7 கோடி நிதி உதவி பெறப்பட்டது. மேலும் ரூ.6.5 கோடி மாநில நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இதனால் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர், தத்தைமஞ்சி ஆகிய 2 ஏரிகளை இணைத்து 6-வது புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

மேலும் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளின் நீர் இருப்பு 58 மில்லியன் கன அடியாக இருப்பதை 350 கன அடியாக அதிகரிக்க செய்து வரும் நிலையில் உபரிநீர் கடலுக்கு செல்வது தடுக்கப்படும். இந்த ஏரிகளில் இருந்து 600 கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்படுகிறது.

ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் வகையிலும் பல இடங்களில் விவசாயத்திற்கு தேவையான நீரை வெளியேற்றும் வகையிலும் ஷெட்டர்கள் அமைக்கபட்டுள்ளது. தற்போது தத்தைமஞ்சி ஏரியின் கரைகள் மற்றும் அணைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதற்கு 4 ஷெட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பொன்னேரி வழியாக ஆரணியாறு செல்லும் நிலையில் லட்சுமிபுரம் அணையின் வலது கரையில் வழியாக செல்லும் வெள்ள நீர் காட்டூரங்கால் வழியாக காட்டூர் ஏரி, தத்தைமஞ்சி ஏரிகளுக்கு செல்கிறது.

கடந்த ஆண்டு காட்டூர், தத்தைமஞ்சி ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்ட மழைநீரை நம்பி விவசாயிகள் நெல் நாற்று விட்டு நிலையில் திடீரென ஏரியில் இருந்த 350 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றி கடலில் கலந்து வீணானது. எனவே விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

எனவே விவவாயிகளும், பொது மக்களும் பயனடையும் வகையில் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்