பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
|பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளி வாகனங்களுக்கான நெறிமுறைகள் பின்வருமாறு,
பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன டிரைவர்களை நியமிக்க வேண்டும்.
டிரைவர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.
டிரைவர் மற்றும் உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.
போக்சோ சட்ட விதிகள் பற்றி டிரைவர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
பள்ளி வாகனங்களில் டிரைவர் மற்றும் உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.