சென்னையில் உதயமாகும் புதிய ரெயில் நிலையம்...!
|சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, குமரி, கோவை, சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவுள்ளது.