புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்
|நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிற்பகலில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இருவர் வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்துள்ளனர். அவர்களின் அத்துமீறலால் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிம்மதியளித்தாலும், நாடாளுமன்றத்திற்குள் மிகவும் எளிதாக நுழைந்து இத்தகைய தாக்குதலை நடத்த முடியும் என்பது மிகவும் கவலையளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்துக்குள் வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது? என்பதுதான் முதன்மையான வினா ஆகும். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட 3 மாதங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும். பாதுகாப்பில் கோட்டை விட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் மிக எளிதாக குதிக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பணியாற்றக்கூடிய நாடாளுமன்றம் எந்தவித பாதுகாப்புக் குறைபாடும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அத்தகைய தன்மையுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளதா? என்பது குறித்து பாதுகாப்புத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.