< Back
மாநில செய்திகள்
புதிய உறுப்பினர் சேர்க்கை- கடன் வழங்கும் மேளா
அரியலூர்
மாநில செய்திகள்

புதிய உறுப்பினர் சேர்க்கை- கடன் வழங்கும் மேளா

தினத்தந்தி
|
29 Sept 2023 11:59 PM IST

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூட்டுறவுத்துறை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் மேளாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

கடன் வழங்கும் மேளா

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 கடன் மேளாக்கள் நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 2 கடன் மேளாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டம், செந்துறையில் கூட்டுறவுத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். இதில் 1,592 பயனாளிகளுக்கு ரூ.15.15 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டது. இதில் பயிர்கடனாக ரூ.9.5 கோடியும், 35 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2.96 கோடியும், மாற்றுத்திறனாளிகள் கடன்கள் 11 பேருக்கு ரூ.5.5 லட்சமும், கால்நடை வளர்ப்பு நடைமுறை மூலதனகடனாக 171 பேருக்கு ரூ.54.16 லட்சமும், டாம்கோ கடன் ரூ.12.82 லட்சமும், வீட்டு வசதிக் கடன் 5 பேருக்கு ரூ.57 லட்சமும், வீட்டு அடமானக்கடன் 2 பேருக்கு ரூ.22.75 லட்சத்தையும், அரியலூர் கூட்டுறவு வங்கி சார்பில் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உண்டியல் மற்றும் கணக்குப்புத்தகத்தினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

அரியலூர் மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 9 திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், ஒரு நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்டத்திலுள்ள மற்ற கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மேற்படி கடன்கள் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு வாழ்வாதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடன் மேளாக்கள் அதிகளவில் நடத்திடவும், அதன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்த்திடவும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாதவர்களுக்கு கடன்கள் வழங்கிடவும் திட்டமிடப்பட்டு அதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 110 ரேஷன் கடைகளில் வருகிற 3-ந் தேதி முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்வதற்கான எந்திரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் அரசு, தாசில்தார் பாக்கியம் விக்டோரியா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்