முறப்பநாடு விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம்
|விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
இவரை கடந்த 26-ந்தேதி 2 மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராமசுப்பிரமணியன் , மாரிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறப்பநாடு பகுதியில் மணல்கொள்ள தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது பற்றியும், மணல்கொள்ளை எப்போதும் நடக்கிறதா, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
இந்த நிலையில், விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசாரணை அதிகாரி நியமனமும், இதன் மூலம் நடைபெறவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.