புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த புதிய கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் சாதனை
|புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்) டைரக்டர் டாக்டர் கலைச்செல்வி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் 75 ஆவது வருட நிறுவன நாள் வரும் ஜூலை 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குறைந்தது 5 புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டோம்.
அதில் முதல் வெற்றியாக முக்கிய கண்டுபிடிப்பாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக் கூடிய ஒரு திடப் பொருளை எங்களது விஞ்ஞானிகள் டாக்டர் ரவி பாபு , டாக்டர் ஸ்ரவந்தி, டாக்டர் சிவசண்முகம், டாக்டர் வாசுதேவன் ஆகியோர் இணைந்த குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு சாக்ஸ் -நாக்ஸ் என்ற கலவையில் வெளி வருகிறது. இதில் உள்ள சாக்ஸ் என்ற கார்பன்-டை-ஆக்சைடை மிகச் சரியாக பிரித்து மீண்டும் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் உருமாற்றம் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம்.
இந்திய அளவில் சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தான் முதன்முறையாக திட நிலையில் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சக் கூடிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தை தொழில் நிறுவனங்களில் பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படும் இவ்வாறு கூறினார் .